புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் திருநாளூர் தெற்கு கிராமத்தில் 3 பெண் குழந்தைகள், ஒரு மூதாட்டி, ஒரு நோயாளி பெண்ணுடன் செல்வராஜ் என்பவர் குடும்பம் மரத்தடியில் சமைத்து சாப்பிட்டு வசித்து வருகின்றனர். இவர்கள் வைக்கோல் பட்டறையிலும் கழிவறையிலும் புத்தகம், உடைகள் உள்ளிட்ட உடைமைகளை வைத்துக் கொண்டு பெண் பிள்ளைகளை மழைக்காலங்களில் பக்கத்து வீடுகளில் தங்க வைக்கப்படுகின்றனர். மேலும் செல்வராஜ், பள்ளி, கடைகளில் தூங்குவதும் மற்ற நேரங்களில் மரத்தடியிலும் என தங்கிப் பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனை குளமங்கலம் பாரதப் பறவைகள் அறக்கட்டளை மூலம் அறிந்தோம். இத்தனை இன்னல்களுக்கிடையில் தன் 3 பெண் குழந்தைகளுக்கும் கல்வியே அழியாத செல்வம் என்பதை உணர்ந்து தொடர்ந்து படிக்க வைத்து வருகிறார்.
அந்த கிராமத்தில் நாம் நேரடியாக கண்ட மனதை வலிக்கச் செய்யும் கண்ணீர் காட்சிகளை வீடியோ மற்றும் செய்திகளாக நக்கீரனில் வெளியிட்டிருந்தோம். இந்த குடும்பத்திற்குக் குடியிருக்க ஒரு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருந்தோம். இந்த நிலையில் குளமங்கலம் பாரதப் பறவை அறக்கட்டளை முதல்கட்டமாக அந்த குடும்பம் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஆஸ்பெட்டாஸ் செட் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நக்கீரனில் செய்தியைப் பார்த்த, அமைச்சர் மெய்யநாதன் தரப்பில் இருந்தும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். அதே போல, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா உடனே செல்வராஜ் குடும்பத்திற்கு அரசு வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்படி அடுத்த நாளே அதிகாரிகளை திருநாளூர் கிராமத்திற்கு அனுப்பி ஊராட்சி மன்ற நிர்வாகிகளுடன் சம்மந்தப்பட்ட செல்வராஜ் குடும்பம் வசிக்கும் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை கேட்டுள்ளார்.
அதிகாரிகளின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் திங்கள் கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வராஜை அழைத்திருந்தனர். ஊராட்சி மன்ற நிர்வாகிகளுடன் சென்ற செல்வராஜிடம் மாவட்ட ஆட்சியர் அருணா 'அரசு வீடு கட்டுவதற்கான ஆணையைக் காட்டி இது என்ன தெரியுமா?’ என்று கேட்க இது வீடு கட்ட உத்தரவு என்று சொன்ன செல்வராஜிடம் உத்தரவு நகலை வழங்கிய மாவட்ட ஆட்சியர், உடனே வீடு கட்டுங்கள், பெண் குழந்தைகளை நல்லா படிக்க வைக்கனும்' என்று கூறி வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முனைவர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக வீடு இல்லாமல் பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவதிப்பட்டு வந்த செல்வராஜ் குடும்பத்திற்கு அரசு வீடு கிடைத்திருப்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.