வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சின்னசேரி கிராமத்திற்கு ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட ஒரு வருடத்திற்கு முன்பு ஆணை வந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தை குடியாத்தம் ஒன்றிய செயலாளர் நத்தம் பிரதீஸ் அதே ஊரைச் சேர்ந்த ஒன்றிய பொருளாளர் பழனி பெயரில் காண்ட்ராக்ட் எடுத்துள்ளார். ஒன்றிய செயலாளர் பிரதீசுக்கும் பழனிக்கும் இடையே வேறு காண்ட்ராக்ட் பணிகளில் பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு இருவரும் எதிரும் புதிருமாக மாறினர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்றிய செயலாளர் பிரதீஸ், பழனியின் எதிரியான சின்னசேரி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணி என்பவருடன் நட்பு பாராட்டினார். பழனி பெயரில் எடுத்த நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவற்கான ஆணையை ரத்து செய்ய வைப்பதற்காக அந்த இடத்தில் கட்டக்கூடாது என்று தகராறு செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் தற்போதுள்ள ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணிக்கு எதிராக பழனி நின்றதால் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் பழனியும் வார்டு உறுப்பினர்கள் ஐந்து பேரும் சேர்ந்து இந்த பிரச்சினையை ஒன்றிய சேர்மன் சத்யானந்தம், ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் ஆகியோரிடம் கொண்டு சென்றுள்ளனர். அவர்களாலும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. பின்னர் வேலூர் மாவட்டச் செயலாளர் நந்தகுமாரிடம் முறையிட்டதற்கு அந்த இடத்திலேயே கட்டுமாறு கூறியுள்ளார் . பின்னர் பழனி அந்த இடத்தில் பூமி பூஜை போட முயலும்போது, ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணியின் ஆதரவாளருக்கும் ஒன்றிய நிர்வாகி பழனிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பினரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளித்துள்ளனர்.
இந்த பிரச்சினையை குடியாத்தம் ரெகுலர் பிடிஓ, பிரச்சனை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இதையடுத்து விசாரித்தவர், அதே இடத்தில் கட்டுமாறு கூறியுள்ளார். பிடிஓக்கள், மேனேஜர், என்ஜினியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் புடைசூழ காவல்துறையினர் பாதுகாப்புடன் நவம்பர் 4 ஆம் தேதி மீண்டும் பூமி பூஜை போட முயலும்போது ஒன்றிய செயலாளர் நத்தம் பிரதீஸ் ஒன்றிய நிர்வாகிகள் இரண்டு பேருடன் வந்து தடுத்துள்ளார்.
அப்போது அங்கிருந்த கட்சிக்காரர்கள், வார்டு உறுப்பினர்கள் கோபமாகி, “ஒன்றிய செயலாளராக இருந்தால் அதை உன் ஆபிசில் வைத்துக் கொள். இந்த ஊரில் நாட்டாமை செய்வதற்கு நீ யார்? இந்த ஊருக்கு இனிமேல் நீ வரக்கூடாது, மீறி வந்தால் அவ்ளோதான்” என ஒருமையில் பேசினர்.
அங்கிருந்த போலீஸார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆளுங்கட்சிக்காரர்கள் தங்களுக்குள்ள கோஷ்டி சண்டையை வெளிப்படையாகப் பொதுவெளியில் அடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொள்வது அப்பகுதியில் கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.