திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பாக ஒட்டன்சத்திரம் ஜவ்வாதுப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பகவுண்டர் மகன் ப.வேலுச்சாமி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் ஒட்டன்சத்திரம் அரசபிள்ளைப்பட்டியைச் சேர்ந்த கருப்பணகவுண்டர் மகன் க.ஜோதிமுத்து போட்டியிடுகிறார்.

தி.மு.க. சார்பாக ப.வேலுச்சாமி பெயர் அறிவிக்கப்பட்ட உடன் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தி.மு.க.வினர் உற்சாகமாக பட்டாசு வெடித்து வெற்றி விழா போல் கொண்டாடினார்கள். அன்று இரவு 7 மணி அளவில் உதயசூரியன் சின்னம் வரையும் பணியை தொடங்கிவிட்டனர். ஆத்தூரில் மதுரையை சேர்ந்த ஓவியர்கள் வீடு வீடாக உதயசூரியன் சின்னம் வரையும் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் உதயசூரியன் சின்னம் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க.விற்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வினர் சற்று மந்தமாகவே உள்ளனர். தி.மு.க.வினரின் தேர்தல் பணியை பார்த்து அ.தி.மு.க.வினர் விரக்தி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் கூறுகையில் அதிமுகவிற்கு முதல் வெற்றியையும், இரட்டை இலை சின்னத்தையும் பெற்றுக் கொடுத்தது திண்டுக்கல் தொகுதி. ஆனால் இந்த தொகுதியில் அதிமுக போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது என்றனர். திமுகவினரின் உற்சாகம் எதிர்க்கட்சியினரை கலக்கமடைய செய்துள்ளது!
