
டி.ஜி.பி.களின் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், மதுவிலக்கு டி.ஜி.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் வந்த தலைமை தேர்தல் அதிகாரி, “தமிழகத்தில் மதுவிலக்குப் பிரிவு சரியாக செயல்படவே இல்லை. மதுபானங்களை மொத்தமாக பதுக்கிவைக்கும் பணி குறையவும் இல்லை. மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட பெரிய முதலாளிகளை ஏன் கைது செய்யவில்லை. கூலி ஆட்களை மட்டுமே கைது செய்துள்ளீர்கள்” என்று உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடமும், மதுவிலக்குப் பிரிவு சிறப்பு டிஜிபி ஷகீல் அக்தரிடமும் கேள்விகளை எழுப்பியதோடு, இதற்கான ஆய்வு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளோடு தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், மதுவிலக்கு ஆணையர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகிய இரு பதவிகளை வகித்து வந்த மோகன், அதிரடியாக மதுவிலக்கு ஆணையர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். தற்போது குடிசை மாற்று வாரிய உறுப்பினர் செயலாளராக உள்ள கிர்லோஷ்குமார், மதுவிலக்கு ஆணையர் பதவியைக் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடந்து தலைமை தேர்தல் ஆணையரிடம் இது தொடர்பான ஆய்வு அறிக்கையைச் சமர்பித்துள்ளனர்.