மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்த நேரத்தில் கல்லணைக் கால்வாயிலும், கொள்ளிடத்திலும் கடந்த மாதம் இறுதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலுக்குப் போனது. இந்த நிலையில் கல்லணைக் கால்வாயில் கடைமடைப் பகுதியில் கடந்த மாதம் தொடக்கத்தில் பாலங்கள், மதகுகள் உடைக்கப்பட்டும், தரை தளம் மற்றும் தடுப்புச் சுவர்கள் கட்டுமானம் எனத் தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதிக்கரம்பை, புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு, நெய்வத்தளி எனப் பல பகுதிகளிலும் புனரமைப்புப்பணிகள் தொடங்கியது.
இந்த பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருந்ததால் தஞ்சை மாவட்டம் ஈச்சன்விடுதியில் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுப் புனரமைப்புப் பணிகள் துரிதமாக நடந்தது. தரை தளம், தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு பாலங்கள், மதகுகள் பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த நிலையில் பாலம் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இன்று (19.08.2024) கடைமடைக்கு மும்பாலை வரை செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேற்பனைக்காடு கீழ்ப்பாலத்தில் தண்ணீர் வந்துள்ள நிலையிலேயே பாலக்கட்டைகள் கட்டுமானப் பணியில் கான்கிரீட் போடப்படும் பணிகளும் நடந்து வருகிறது.
20 நாட்கள் தாமதமாகக் கடைமடைக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று இரவு அல்லது நாளை (20.08.2024) காலை நாகுடியை கடந்து செல்லும் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் வந்தால் மட்டுமே ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்பலாம், ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பினாலே விவசாயப் பணிகளைத் தொடங்க முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.