கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி நடைபெற்ற என்சிசி கேம்பில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய நபராக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல் சிவராமனின் தந்தையும் கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இந்நிலையில் சிவராமன் மரணம் குறித்து தற்பொழுது கிருஷ்ணகிரி காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பான விளக்கத்தில், 'கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிவராமன் தப்பி ஓடியபோது எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சையின் பொழுது அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டது தெரியவந்தது.
மருத்துவர்களுடைய பரிந்துரையின் பேரில் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 21ம் தேதி சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து இரண்டு நாள் சிகிச்சையில் இருந்த அவர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இறந்திருக்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி (9/07/2024) குடும்ப பிரச்சனை காரணமாக எலி மருந்து சாப்பிட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வீடு திரும்பியுள்ளார். அதேபோல் இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்படுவதற்கு முன்பாகவும் இரண்டாவது முறையாக எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்' என போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.