சென்னையை சேர்ந்த சரவணகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டு 25 லட்சம் பேர் ஏர்செல் தொலை தொடர்பு இணைப்பை பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6500 டவர்கள் வாடகைபாக்கி காரணமாக செயல்படவில்லை என ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை ஆதிகாரி சங்கர நாராயணன் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பிப்ரவரி 22 முதல் ஏர்செல் இணைப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்காண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 90% வாடிக்கையாளர்களால் ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியவில்லை என்பதால் மத்திய அரசும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் ஏர்செல் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்.என்.ப்பி. மூலம் வாடிக்கையாளர்கள் மாறும் வரையிலோ அல்லது முழுமையாகவோ வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஏர்செல் நிறுவனத்தில் ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதால், திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அளவில்லாத சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதால் டிராய் தலையிட்டு ஏர்செல் நிறுவனத்தின் மீது நடடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கோரியிருக்கிறார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து மத்திய தொலைதொடர்பு துறை, டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனம் ஆகியவை ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
சி.ஜீவா பாரதி