18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04.06.2024) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆர்வமுடன் நாளைய விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் செய்தியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அந்தச் சுற்றுக்கான முடிவுகள் தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தியாளர்கள் கைப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுப் பார்வையாளர்கள் தமிழகம் வந்துள்ளனர்.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் பொதுப் பார்வையாளர் கையொப்பமிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக வாக்கு எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு தேர்தல் செய்தி தொடர்பாளர்கள் மற்றும் தகவல் அறிவிப்பு பலகையின் மூலம் வாக்கு எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படும். நாளை காலை 08.00 மணிக்கு தபால் வாக்கு என்னும் பணி தொடங்கும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் என்னும் பணி 08.30 மணிக்கு தொடங்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து சீல் வைக்கப்பட்ட அறைகளும் நாளை காலை 08.00 மணிக்கு திறக்கப்படும். அதே சமயம் தபால் வாக்குகள் அதிகமாக உள்ள இடத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 09.00 மணி ஆகும். 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ண அதிக மேசைகள் போடப்பட்டுள்ளது. அதன்படி சோழிங்கநல்லூர் 30 மேசைகளும், கவுண்டம்பாளையம் 20 மேசைகளும், பல்லடம் 18 மேசைகள் அமைப்பு. மற்ற இடங்களில்14 மேசைகள் அமைக்கபட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.