உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது சிசிடிவி கேமரா வசதிகள், 3 அடுக்கு பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார்.