கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் உற்பத்தி செய்வது தொடர்பான தேடலில் போலீசார் ஈடுபட்டனர். முன்னதாக தானிப்பாடி, தண்டராம்பட்டு, மோரணம் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தமாக 22 பேர் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் இண்டு இடுக்குகளில் எல்லாம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.