உத்தரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து கள்ளத் துப்பாக்கிகளை வரவழைத்து சென்னையில் விற்பனை செய்த விவகாரத்தில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான இந்து முன்னணி சுரேஷ் என்பவர், கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்களைக் கொண்டுவந்து புழல் மற்றும் காவாங்கரை பகுதிகளில் விற்கப்படுவதாக கொளத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்தந்த பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக 'தாத்தா' என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வரும் நபரான யோகேஷ் என்பவரைக் கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால் யோகேஷ் தலைமறைவாகிவிட்டார். போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் யோகேஷை ஒரு வழியாக கைது செய்தனர். அவருடைய செல்போனை பரிசோதனை செய்ததில் அதில் அவர் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் துப்பாக்கி குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சட்டவிரோதமாக பெங்களூரில் இருந்து மதுபானங்களை வாங்கி விற்பனை செய்ததோடு, கள்ள துப்பாக்கியையும் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசம் சென்ற யோகேஷ் இரண்டு கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்து சென்னையைச் சேர்ந்த சையது அபுதாஹிர் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. மற்றொரு துப்பாக்கியை சங்கர் என்பவருக்கு விற்றது தெரியவந்தது. அபுதாஹிரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். அபுதாகிர், இந்து முன்னணி சுரேஷ் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் யோகேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் நவாஸ், அஹமதுல்லாஹ் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.