கரோனா வைரஸுக்கு இதுவரை முறையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் உலகநாடுகள் திணறி வருகின்றன. மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடித்துவிட்டதாக சென்னை, ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் என்பவர் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை மூலம் தெரிவித்து வந்தார்.
போலிமருத்துவரான இவர் வதந்தி பரப்பி வருவதாக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர் சார்பில் சென்னை காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து சித்த மருத்துவர் தணிகாசலத்தை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி தணிகாசலம் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார், குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர்.