
கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும் நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று மெதுவாக அதிகரித்து வருகிறது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தளங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடந்த 23.08.2021 முதல் 06.09.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது.
திருச்சி மாநகர பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறுபவர்களைத் தடுக்க சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று (29.08.2021) சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பாக மாநகரில் மக்கள் அதிகம்கூடும் இடங்களான அண்ணாசிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், மேலப்புதூர் சந்திப்பு, தலைமை தபால் நிலையம் மற்றும் காந்தி மார்க்கெட் சந்திப்பு ஆகிய இடங்களில் சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நேற்று ஒருநாள் அரசின் தடை உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 1200-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 30 நபர்கள், சாலை விதிகளை மீறி தலைக்கவசம் அணியாமலும், சீட் பெல்ட் அணியாமலும், மற்ற விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் என 2,000 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூ.6,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென திருச்சி மாநகர காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.