Skip to main content

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான திட்டம் என்ன? -அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

 corona - abroad Indians - Central government - Highcourt


வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசின் திட்டம் என்ன, பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன என்பன குறித்த விவரங்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 


கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுவர விமானங்களை இயக்குவதற்கான நடைமுறைகளை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி அறிவித்திருந்தது. அதனடிப்படையில், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60,942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து துவங்கி உள்ளது. ஆனால், தமிழகத்தில் விமானப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்கள் இயக்கத் தடை விதித்துள்ளதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு, உறைவிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 

 

 


மத்திய அரசின் அதிகாரத்தில் மாநில அரசு தலையிடமுடியாது.  மத்திய அரசின் அதிகாரத்தை மீறி முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க உத்தரவிட  வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கரோனா தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான இந்தியர்களும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.  அவர்கள்,  அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகி தங்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைக் கொண்டு வர மத்திய அரசு நடைமுறைகளை வகுத்திருந்த போதும், தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க மாநில அரசு அனுமதி மறுப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் விவரங்கள், இதுவரை இந்தியாவிலும், தமிழகத்திலும் இயக்கப்பட்ட விமானங்கள் எத்தனை, சிக்கியுள்ள மீதமுள்ளவர்களை மீட்க இந்திய அரசின் திட்டம் என்ன, பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன என்பன குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
 

http://onelink.to/nknapp


அதுபோல, தமிழக விமான நிலையங்களில் தரையிறங்க எத்தனை விமானங்களுக்கு அனுமதி கோரப்பட்டது, அந்தக் கோரிக்கைகள் மீது எடுத்த முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.


 

சார்ந்த செய்திகள்