தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி (20.06.2024) அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் 2327 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில், இன்று (14-09-24) தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது. 2327 காலி பணியிடங்களுக்கான நடைபெறும் இந்த தேர்வு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2,763 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த நிலையில், இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு இருக்கும் நிலையில், குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சனாதனத்திற்கு எதிராகப் பேசியவர்கள் எல்லாம் அமைதியாகிவிட்டனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.