கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் கடந்த 18 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் விற்பனை செய்த சாராயத்தை வாங்கி குடித்துள்ளார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனால் மீண்டும் உடலை வீட்டுக்கு எடுத்து வந்த ஜெயமுருகனின் உறவினர்கள் அவரது உடலை மறுநாள் அடக்கம் செய்தனர். ஆனால் ஜெயமுருகன் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது அவருடைய வீட்டாருக்கு தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்த நிலையில் ராமர் என்பவரையு விசாரித்த போது அதே ஊரில் உயிரிழந்த ஜெயராமன், ஜெயமுருகன் உட்பட பலர் தன்னிடம் சாராயம் வாங்கிக் குடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து ஜெயராமன், ஜெயமுருகன் ஆகியோர் வீட்டிற்குச் சென்ற போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால்தான் உயிரிழந்தார்களா என்பதை உறுதிசெய்ய உடல்கள் தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மதியம் வருவாய் வட்டாட்சியர் கமலக்கண்ணன், காவல் ஆய்வாளர் கந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.