சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா தலத்தை பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் முதன்மைச் செயலாளரும் சுற்றுலா துறை ஆணையருமான திருமதி காக்கர்ல உஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 14.7 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனை தொடர்ந்து சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிதியின் மூலம் ரூ 8.65 கோடி மதிப்பீட்டில் ஹோட்டல் தமிழ்நாடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் செல்வக்குமார் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செயற்பொறியாளர் பௌல், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முனிசாமி, பிச்சாவரம் படைக்கு இல்ல அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.