திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்யாணி என்பவர் சிறு வயதாக இருக்கும்போதே குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கல்யாணிக்குத் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோட்டக்கரையிலேயே தனது இரண்டு மகன்கள் மற்றும் மகளுடன் கல்யாணி வசித்து வந்திருக்கிறார். கல்யாணி சிமெண்ட் கூரை அமைத்து தங்கி இருக்கும் இந்த இடம் செல்வந்தர் ஒருவர் தானமாகக் கொடுத்தாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணி வீட்டின் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுமனையில் குடியேறிய சிலர் தங்கள் குடியிருப்புக்குச் செல்லும் பாதையில் ஆக்கிரமித்து கல்யாணி குடும்பத்தினர் வீடு கட்டி இருப்பதாகப் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் அப்போதைய வட்டாட்சியர் கண்ணன் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அந்த இடம் தானமாகக் கொடுத்த தனி நபர் ஒருவரின் பெயரில் பட்டா இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் பிரச்சனையை நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளுமாறு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் கடந்த வாரம் மீண்டும் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற உள்ளதாகக் கூறி கல்யாணிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து வீட்டை காலி செய்ய ஒரு மாதக்காலம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் திடீரென கல்யாணியின் வீட்டிற்கு மின்வாரியம் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று(4.6.2024) காவல்துறையினரின் பாதுகாப்புடன் முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடிக்க ஜே.சி.பி. இயந்திரத்தை அதிகாரிகள் கொண்டுவந்ததால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் முறையான விசாரணை நடத்தாமல் தங்களுக்கு சொந்தமான நீளத்தை ஆக்கிரமிப்பு எனக் கருதி வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, வீட்டினுள் இருந்தபடியே அதிகாரிகள் முன்னிலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு சாலையில் அலறி அடித்தபடி ஓடினார். இதனைக் கண்ட வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திகைத்து நின்றனர். அப்போது அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தங்களது கையில் வைத்திருந்த தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்து, 60% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய ராஜ்குமாரை மீட்டு அருகிலேயே உள்ள கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, ஏளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்விழி கிராம நிர்வாக அலுவலர் பாக்ய ஷர்மா ஆகிய மூன்று பேரையும் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே அதிகாரிகளின் அலட்சியத்தால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.