கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் சோழபாண்டியபுரம் கிராம ஊராட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் குழு அந்த கிராமத்தில் நடைபெற்ற வீடு கட்டும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முறைகேடுகள் நடைபெற்றதை கண்டறிந்த விசாரணை அதிகாரிகள் கொண்ட குழு அதுபற்றிய அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து சோழவாண்டியபுரம் கிராம ஊராட்சி செயலாளர் பெருமாள், மேற்பார்வையாளர்கள் கலைமணி, கோவிந்தசாமி, கண்ணன் ஆகிய நால்வரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சரவண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அதே ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பல்வேறு நிதியில் செலவினங்கள் மேற்கொண்டது குறித்தும் அதிகாரிகள் குழுவை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு செலவினங்கள் குறித்தும் உரிய ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மத்திய மாநில அரசுகளின் நிதியில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது பற்றி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.