தண்டராம்பட்டு ஒன்றியத்தில் 28 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக தரப்பில் 17 கவுன்சிலர்கள் உள்ளனர். 11 கவுன்சிலர்கள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினராக உள்ளனர். முதல்முறை ஒன்றிய குழு தலைவர் தேர்தல் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெற்றபோது, திமுக கவுன்சிலர்களை அலுவலகத்துக்குள் போக விடாமல் அதிமுகவினர் போராட்டம் செய்ய போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது, தேர்தல் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என காவல்துறை சொன்னது எனச்சொல்லி தேர்தலை ஒத்திவைத்தார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி. இதனால் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெறவில்லை.
இரண்டாவது முறையாக தேர்தல் ஜனவரி 30 என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 17 கவுன்சிலர்களும் தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றபோது, தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நிர்வாக பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்படுகிறது என அறிவித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியான திமுக கவுன்சிலர்கள் 17 பேரும், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ கிரி தலைமையில், வழக்கறிஞர்களோடு வந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கந்தசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்.எல்.ஏ செங்கம் கிரி, எங்கள் கவுன்சிலர்கள் 17 பேர் ஒன்றிய குழு அலுவலகத்துக்கு சென்றபோது, அங்கு அலுவலக உதவியாளர் மட்டும் இருந்தார். நிர்வாக காரணத்துக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டது என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. எங்கள் கவுன்சிலர்கள் நியாயம் கேட்டு வழக்கறிஞர்களுடன் வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் என்கிற முறையில் முறையிட்டார்கள். அவர் ஒருப்பக்கம் சார்பாக செயல்படுவது அவரது பேச்சில் தெரிந்தது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என அவர் கூறவில்லை. மக்களின் விருப்பப்படி தேர்தலை இந்த மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்துவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.