கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் ராணுவ வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்காக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து ஜியான்ஸ்ரெட்டி (வயது 6) மற்றும் வியோமா பிரியா (வயது 8) என்ற 2 குழந்தைகள் உயிரிழந்தனர். பூங்காவில் விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாராணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “பூங்காவில் அமைக்கப்பட்ட புதைவட கம்பியில் பழுது ஏற்பட்டதால் குழுந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. புதைவட கம்பி முறையாக புதைக்கப்படாததே இந்த விபத்துக்குக் காரணம் ஆகும். மேலும் பூங்காவில் இரு குழுந்தைகள் உயிரிழந்ததற்கும், மின்வாரியத்திற்கும் தொடர்பில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக மினசார வாரியம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “கோடை விடுமுறை வந்துவிட்டது. குழந்தைகள் விளையாடுவதற்கும் ஆராய்வதற்கும் இது சரியான நேரம். இருப்பினும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நம் அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. குழந்தைகள் மொட்டை மாடியில் அல்லது மின் கம்பிகளுக்கு அருகில் விளையாடும் போது, குறிப்பாக மின் கம்பிகள், கம்பங்கள் மற்றும் உபகரணங்களிலிருந்து விலகி இருக்குமாறு உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.