முதல்வர் ஸ்டாலின், மக்களின் கேள்விகளை உங்களின் ஒருவன் பகுதிகளில் கேட்கலாம் என கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து உங்களில் ஒருவன் பகுதியில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலளித்துள்ளார்.
அந்த வகையில், ‘பொய் வாக்குறுதிகளை வழங்கி திமுக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக, எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்காரே?’ என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “தூத்துக்குடியில் போராடியவர்களை துப்பாக்கியால் சுடச் சொல்லிவிட்டு, நான் டிவியை பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன் என்று சொன்னாரே அந்த பழனிசாமியா? அவர் அப்படித்தான் பேசுவார். அளித்த வாக்குறுதியில் 85 சதவிகிதம் நிறைவேற்றியிருக்கிறோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். புதுமைப் பெண் திட்டம் என்பது தேர்தல் வாக்குறுதியில் இல்லை. நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஒன்று இரண்டு திட்டங்களும் அடுத்த ஓர் ஆண்டுக்குள் நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
‘ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடருது. ஆனால், அதற்கான தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநரின் பிடிவாதம் தொடருதே?’ என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்களை பற்றி நாள்தோறும் செய்திகளில் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரத்தில் மட்டும் நான்கு தற்கொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இவை அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்தவை. இவை எல்லாம் தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியவில்லையா? இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் கையெழுத்து போடுவார்? இவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி உரிய சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர். அமைச்சரவை அனுப்பிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்., அதே சட்டத்தை சட்டமன்றம் மூலமாக நிறைவேற்றி அனுப்பினால் 3 மாதமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதுதான் மர்மமாக இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் ஆன்லைன் விளையாட்டுகளில் வெல்லக் கூடிய தொகைக்கு வரி போடுவதுதான். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இது இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யாமல் அதை அங்கீகரிக்கிற வகையில் வரி போடுகிற இவர்களை என்ன சொல்வது?” எனப் பதிலளித்திருந்தார்.