நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொம்மைகுட்டைமேடு என்ற இடத்தில் இன்று (22.10.2024 நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், 140 திட்டப் பணிகளுக்கு ரூ. 366 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். ரூ. 298 கோடி மதிப்பீட்டில் 134 நிறைவுற்ற திட்டப் பணிகள் திறந்து வைத்தார். சுமார் 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அந்த வகையில் ரூ.664 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிறைவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதாவது ரூ.114 கோடி மதிப்பீட்டில் அரசு சட்டக்கல்லூரி விடுதியைத் திறந்து வைத்தார். ரூ.89 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.52 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பால் பதன ஆலையைத் திறந்து வைத்தார். 3 பாலங்கள், 96 கட்டடப் பணிகள் இணைப்புச் சாலைகளைத் தொடங்கி வைத்தார். அதோடு ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தையும் தொடங்கி வைத்தார். முன்னதாக நாமக்கல் மாநகராட்சி, தில்லைபுரம், சிலம்ப கவுண்டர் பூங்காவில் முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலையையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாடு வளர்ச்சிக்கு அடித்தளமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா விளங்கிக் கொண்டிருக்கிறார். நாமக்கல் மாநகராட்சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையைத் திறந்து வைத்தேன். நாமக்கல் மாவட்டத்தில் அவர் சிலை அமைவது மிகப் மிகப் பொருத்தமானது ஏனென்றால் சேலம் மாவட்டத்திலிருந்து 1997ஆம் ஆண்டு புதிதாக நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர் தான். தலைநகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் மாபெரும் கட்டடத்தை அமைத்து அதற்கு நாமக்கல் கவிஞர் மாளிகைனு 50 ஆண்டுகளுக்கு முன்னாடி பெயர் சூட்டியதும் கலைஞர் தான்.
இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து நடைபோட வைப்போம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவோம். கடந்த சில நாட்களாக, மூன்றாண்டுகளாக நமது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். வருகிற நவம்பர் மாதம் தொடங்கி, எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பணிகளை நேரடியாகக் கள ஆய்வு செய்யப் போகிறேன். அதனால் தான் சொல்கிறேன், திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். நாமக்கல் மாவட்டம், 'புதுமைப் பெண்’ திட்டம் மூலமாகக் கல்லூரி பயிலும் மாணவிகள் 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதில் மாநிலத்திலே முதலிடத்திலேயும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் மூலமாகக் கல்லூரி பயிலும் மாணவர்கள் 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதில் இரண்டாம் இடத்திலேயும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.