நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தனியார் ஆங்கில இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், “கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு பா.ஜ.க.வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் இந்த கட்டுரையை மேற்கோள் காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாக இந்து நாளேடு தோலுரித்துள்ளது. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில் 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?.
‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது. மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து பாஜகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்க கணக்குகளில் உள்ள பெயரையடுத்து ‘மோடியின் குடும்பம்’ என்பதைச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.