சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (10.05.2024) காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டன. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https//results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரியில் அறிந்து வருகின்றனர்.
வெளியான தேர்வு முடிவுகளின் படி, தமிழகம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேரில் மாணவிகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக மாணவிகள் 94.53 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.58 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95 சதவிகிதம் அதிகம் ஆகும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.77% ஆகவும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.90% ஆகவும் உள்ளது. 87.90% அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடத்தில் 96.85 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 99.15% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 96.78% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியலில் 96.72% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 95.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20 ஆயிரத்து 691 பேரும், அறிவியலில் 5 ஆயிரத்து 104 பேரும், சமூக அறிவியலில் 4 ஆயிரத்து 428 பேரும் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 13 ஆயிரத்து 510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12,491 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 92.45% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கையில் 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2 ஆம் இடம் பிடித்துள்ளது. ராமநாதபுரத்தில் 96.36% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3 ஆம் இடம் பிடித்துள்ளது. 4 ஆயிரத்து 105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் 1364 அரசுப் பள்ளிகள் அடங்கும்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!. மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!.
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.