தேசியவாத காங்கிரஸின் (அஜித் பவார் பிரிவு) மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து இரு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உடைய கூட்டாளிகள் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பஞ்சாபைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் பல்வேறு கொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடி ஆவார். தற்பொழுது லாரன்ஸ் சிறையில் இருக்கும் நிலையில் பாபா சித்தி கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
எப்படி சிறையிலிருந்து இந்த கொலையைத் திட்டமிட்டு லாரன்ஸ் நிறைவேற்றினார். சிறையில் தொலைப்பேசி வசதி உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் கிடைத்ததா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்.மற்றொருவர் ஹரியானாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கும் லாரன்ஸ்க்கும் தொடர்பு இருக்கும் எனச் சந்தேகப்படும் நிலையில் டெல்லியில் இருந்து சிறப்பு பிரிவு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மொத்தமாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கோணமாக மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் இந்த படுகொலை அரசியல் சார்ந்த கொலையாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். ஓய் பிளஸ் பாதுகாப்பில் இருந்த முன்னாள் அமைச்சர், அரசியல் பிரபலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒருவேளை பாபா சித்திக் கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் ஈடுபட்டிருப்பது உண்மையானால், ஏற்கனவே பிரபல நடிகர் சல்மான்கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பில் இருந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் படுகொலை செய்யப்பட்ட பாபா சித்திக்கிற்கு சல்மான்கான் நெருக்கமானவர் என்பதால் அவரது பாதுகாப்பை உறுதி செய்வது என்ற அடிப்படையில் சல்மான்கான் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாபா சித்திக் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும். பாபா சித்திக்கின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.