Skip to main content

பெரம்பலூர் நகராட்சி மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 25/10/2024 | Edited on 25/10/2024
CM MK Stalin gave a happy news to the people of Perambalur Municipality

பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரூ. 345 கோடி மதிப்பீட்டில்  செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 65 ஆயிரம் பொதுமக்கள் பயனடைவர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள  செய்திக்குறிப்பில், “ தமிழக அரசின் வரவு-செலவு கூட்டத் தொடரின்போது கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு, ரூ.366.00 கோடி மதிப்பீட்டில் 65 ஆயிரம் மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்படிருந்தது.

இத்திட்டம், பெரம்பலூர் நகராட்சிக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்ற அளவில் தினசரி 12.34 மில்லியன் லிட்டர் மற்றும் சிப்காட் எறையூர் 1.65 மில்லியன் லிட்டர் மற்றும், பாடலூருக்கு 2.20 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான நீர் கொள்ளிடம் ஆற்றில் நொச்சியம் அருகில் அமைக்கப்படும். ஒரு நீர் சேகரிப்பு கிணறு மற்றும் 2 நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் பெறப்பட்டு பெரம்பலூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கப்படும்.  இத்திட்டத்தின் மூலம், 14 ஆயிரத்து 706 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 65 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.

CM MK Stalin gave a happy news to the people of Perambalur Municipality

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தினை ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடமிருந்து கடன் (TUIFDCO Loan), கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம் (KNMT) மற்றும் தமிழ்நாடு அரசின் மானியம் (GoTN one time Grant), ஆகிய நிதியாதாரங்களின் கீழ் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், பெரம்பலூர் நகராட்சி மற்றும் சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்கா ஆகியவற்றின் குடிநீர் தேவையை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் அமைகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்