இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.
அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.