கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் கிருஷ்ணன். அதேபகுதியில் கட்டிட தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பூட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்து மகள் கலைச்செல்வி க்கும் கடந்த 10- ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும், தற்போது கருத்து முரண்பாடு காரணமாகவும் கடந்த இரண்டு மாதங்களாக மனைவி கலைச்செல்வி பூட்டை கிராமத்தில் உள்ள அவருடைய தந்தை வீட்டில்வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபகுதியில் உள்ள நண்பர்களுடன் கிருஷ்ணன் மது அருந்தியதாகவும் அப்போது கிருஷ்ணனின் நண்பர்கள் 'உனக்கு எப்போதுமே குழந்தையே பிறக்காது. நீ எல்லாம் செத்துப் போடா' என கேலி கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிக மதுபோதையிலும் மிகுந்த கோபமடைந்த கிருஷ்ணன் பூட்டை கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை கழுத்தை கத்தியால் அறுத்ததாகவும் கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கலைச்செல்வியை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தற்போது கலைச்செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்கராபுரம் காவல் துறையினர் மனைவியின் கழுத்தை அறுத்த குற்றவாளி கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.குழந்தை இல்லாத விரக்தியிலும் நண்பர்களின் கேலி கிண்டலால் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனால் சங்கராபுரத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.