நாணயம் வெளியிடுவது, மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க யோசிக்கும் முதல்வர் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''தமிழ்நாடு முழுக்க, திருச்சி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்ப்பாட்டத்திற்கு கலந்துகொள்ள வருபவர்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள விடாமல் போலீசே தடுக்கிறார்கள். ஏன் இதை செய்கிறார்கள். இது ஜனநாயக நாடு தானே. சுதந்திர நாடு தானே. ஒரு தொழிலாளர்கள் தங்களுடைய கருத்தைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது.
முதல்வர் இவர்களுடைய நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களை தடுப்பது நிச்சயமாக கண்டனத்துக்கு உரியது. தேர்தலுக்கு முன்பு திமுக ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. தேர்தலுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று ஒட்டுமொத்த கேங்மேன் தொழிலாளர்கள் சார்பாக முதல்வருக்கு இந்த கேள்வி எழுப்புகிறேன். ஏனென்றால் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வெற்றிபெற்று ஆட்சியில் இருக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு கோரிக்கைக்கும் செவி சாய்க்கவில்லை. எனவே தான் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் ஒருபக்கம், மருத்துவர்கள் ஒருபக்கம், செவிலியர்கள் ஒரு பக்கம் என எல்லா துறையிலும் தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இன்று 100 ரூபாய் காயின் வெளியீட்டிற்கும், மகனை துணை முதல்வர் ஆக்கலாம் என்பதிலும் யோசித்துக் கொண்டிருக்கும் முதல்வர் மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். மக்கள் மீது கவனம் செலுத்தி உண்மையில் மக்களுக்கு எது தேவை என்பதை குறிப்பறிந்து செயல்படுத்த வேண்டும்'' என்றார்.