44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 185 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000 க்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 44 வது செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்கு தமிழக அரசின் சார்பில் 114 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, போட்டி நடத்த அனுமதி கிடைத்த 4 மாத காலத்திற்குள் 44 வது செஸ் போட்டிகளையும், அதன் தொடக்க மற்றும் நிறைவு விழாவினை சிறப்பாக நடத்திக் காட்டினார். இந்த போட்டியையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் செஸ் ஒலிம்பியாட் தீபம் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஏற்கனவே உலக அளவில் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை கொண்டுள்ள தமிழ்நாட்டில், மேலும் பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் சிறந்த விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர்களுடன் விளையாடவும், செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை பார்வையிடவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து போட்டிகளில் பங்கேற்க வருகை தந்த சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு உயர்தர நட்சத்திர விடுதிகள், தங்கும் இடத்திலிருந்து போட்டி நடைபெற்ற இடத்திற்கு சென்று வர சிறப்பு போக்குவரத்து வசதிகள், உணவு மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி, இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சதுரங்கப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி நடைபெற்ற ஏசியன் செஸ் எக்ஸளனஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருது (Man of the Year Award) வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இந்த விருதினை ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் சௌகான் பெற்றுக் கொண்டார். 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஆசிய மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியதற்காக முதல்வருக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருதினை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், துணைத் தலைவர் பவேஷ் பட்டேல், செயலாளர் விபினேஷ் பரத்வாஜ், பொருளாளர் நரேஷ் ஷர்மா ஆகியோர் உடன் இருந்தனர்.