நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.
ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.