சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற பெற்ற நடராஜர் கோவில் வளாகத்துக்குள் நடராஜர் சன்னதி அருகே தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இது இந்து அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. நடராஜர் கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில் அறங்காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து இந்து அறநிலையத்தறைக்கு கோயில் அறங்காவலர்கள் கடிதம் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் பிரமோற்சவம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
கோவிந்தராஜ பெருமாள் சன்னதி பகுதியில் இருந்த கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில் மழையால் பழுதடைந்துள்ளது. அதை மாற்றி அமைப்பதற்கு கோவிந்தராஜ பெருமாள் சன்னதி நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய கொடி மரத்தை அகற்றுவதற்கு முதற்கட்ட பணியை நேற்று(நவ.3) இரவு சுமார் 8 மணி அளவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள் செய்தனர்.
அப்போது அங்கிருந்த நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு கோவில் கொடி மரத்தை மாற்றக்கூடாது. பிரமோற்சவம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் எந்த பணியும் செய்யக்கூடாது என்று கூறி கொடி மரத்தைச் சுற்றி நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து பட்டாச்சாரியார்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரவு 11 வரை எந்த முடிவும் எட்டவில்லை. இந்த நிலையில் நவ 4ம் தேதி காலை கொடிமரம் அமைப்பதற்காக இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் அறநிலைத்துறையினர், காவல் துறையினர் கோவிலுக்கு வந்தனர். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொடிமரம் அமைக்கும் போது கொடி ஏற்றுவதற்கு வளையம் வைக்கக்கூடாது பழமை மாறக்கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்து கடிதமாக வழங்க வேண்டும் எனக் கூறினார்கள்.
அதற்கு இந்து அறநிலையத்துறையினரும் தீட்சிதர்கள் கூறியவாறு கடிதம் வழங்கினார்கள். பின்னர் இதனையும் ஏற்க மறுத்து தீட்சிதர்கள் கொடிமரம் அமைப்பதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து 1 மணி நேரம் அவகாசம் கேட்டனர். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அறநிலையத்துறையினர், காவல்துறையினர் கோயில் உள்ளே காத்திருந்தனர்.
அப்போது சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் ஏற்கனவே இதுகுறித்து தாக்கல் செய்த வழக்கு நவ 4-ந்தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இதில் பெருமாள் கோயில் தரப்பு வழக்கறிஞர் மற்றும் நடராஜர் கோயில் வழக்கறிஞர் வாதத்தைக் கேட்டு சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வரும் 15 - நாட்களுக்கு எந்த கொடிமரம் அமைக்கும் பணியையும் மேற்கொள்ளக்கூடாது. தற்போது இருக்கும் நிலையே தொடரவேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளார்.
இதனையறிந்த கோயில் உள்ளே இருந்த அறநிலையத்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்டவர்கள் கோயிலை விட்டு வெளியே வந்தனர். அப்போது அனைவரும் வெளியே வரும்போது தீட்சிதர்கள் சிலர் அரசு அதிகாரிகளை நக்கல் செய்யும் வகையில், "கோயிலை பூட்டபோறோம் வெளியே போ..." எனத் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்த சந்தோஷத்தில் சத்தமிட்டனர். இதனால் அங்கிருந்தவர்களுக்கு முகசுளிப்பு ஏற்பட்டது.