சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் சென்னை மேயர் பிரியா தலைமையில் நேற்று (29.10.2024) நடைபெற்றது. மொத்தமாக இந்த கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ஒன்பது கால்பந்து விளையாட்டு மைதானங்கள் தனியாருக்கு வாடகைக்கு விடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், 'செயற்கை புல் விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும்' என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதோடு சென்னை அண்ணாநகரில் இருக்கக்கூடிய அம்மா மாளிகை, தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கம் உள்ளிட்ட அரங்கங்கள் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்பட இருக்கிறது. போதிய வருவாய் ஈட்டாத காரணத்தால் 5 ஆண்டுகளுக்குத் தனியாருக்குக் குத்தகைக்கு விட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இத்தகைய சூழலில் தான் செயற்கை புல் விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தீர்மானத்திற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க உள்ளிட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதே சமயம் பல்வேறு எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் சென்னையில் செயற்கை புல் விளையாட்டு மைதானங்களைத் தனியார் மயமாக்கும் தீர்மானத்தை வாபஸ் பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.