நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணமானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இந்த கட்டணம் உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து சுங்கச்சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. இருப்பினும் பல்வேறு சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டன.
இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு பகுதியாகத் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் மமக பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அப்துல் சமது உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை மறித்து 400க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதே போன்று செங்கல்பட்டில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அக்கட்சியில் தலைவர் ஜவார்ஹிருல்லா தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
அச்சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுங்கச்சாவடியிருந்த 4, 5 மற்றும் 6ஆம் எண் கொண்ட 3 பூத்துகளில் இருந்த கட்டணம் வசூலிக்கப்படும் மையத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதனையடுத்து அக்கட்சியினர் போலீஸ் வேன் மீது தாக்குதல் நடத்தி முற்றுகையிட்டனர்.
இதனால் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். அதே சமயம் இந்த பதற்றமான சூழல் காரணமாக பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வாங்காமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும் துவாக்குடி சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தின் போதும் சுங்கச்சாவடியின் கண்ணாடி மற்றும் சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. முன்னதாக அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஆகிய 4 சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டன. இவ்வாறு காலாவதியான சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்று கட்டணம் வசூலிக்கக்கூடாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இந்த 4 சுங்கச்சாவடிகளையும் அகற்றக் கோரி மத்திய அரசுக்குத் தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளோம்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.