கேபிள் டி.வி.க்களின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு அமல்படுத்தி வரும் பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து, தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் சார்பில் நாளை(23.10.24) புதன்கிழமை தமிழகம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்பட பிரதான மற்றும் முக்கிய கட்சிகள் பேசவுள்ளன.
‘சேனல் கட்டணம் 19 ரூபாய் என்பதை 5 ரூபாயாக குறைக்க வேண்டும், சேனல் தொகுப்புகளின் விலையை ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ளும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும், கேபிள் டி.வி.க்கு விதிக்கப்பட்டுள்ள 18 % ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும், மக்களின் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் ஓடிடி தளங்களுக்குத் தடை விதிக்க வேண்டும், கேபிள் டி.வி. தொழிலை சிறு தொழிலாக அங்கீகரித்து மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும், டான்ஃபி நெட் பைபர் வயர்களை குறைந்த வாடகையில் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களுக்கு வழங்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் நடத்தவுள்ளனர்.
இந்த போராட்டத்தை ஆதரித்து திமுக டி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக ஜெயக்குமார், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, பாமக கே.பாலு, சிறுத்தைகள் திருமாவளவன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சங்கத்தின் மாநில தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகே நடக்கும் இந்த போராட்டத்தில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சகிலன் நிறைவுரையாற்றுகிறார்.
மத்திய அரசுக்கு எதிராக பிரதான மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த போராட்டத்தை உன்னிப்பாக மத்திய அரசின் உளவுத்துறை கவனிக்கத் தொடங்கியிருக்கிறது.