சேலம் மாவட்டம் தலைவாசலில் 1100 ஏக்கரில் ரூபாய் 1,022 கோடியில் கால்நடை மருத்துவக்கல்லூரி, மீன் பண்ணை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், பால் வளம் உள்ளிட்டவை அடங்கிய கால்நடைப்பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, "கோழி, ஆடு, மாடு வளர்ப்பின் மூலம் தமிழகம் கிராம பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. கால்நடை வளர்ப்பில் மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக கால்நடைப்பூங்கா அமைக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம், முன்னேற்றத்திற்காக கால்நடை வளர்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கால்நடைப்பூங்காவை பார்த்த பின் தமிழகத்திலும் இதுபோல் அமைக்க எண்ணினேன். பால் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அமெரிக்கன் படைப்புழு தாக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஏழு மாவட்டங்களில் உணவு பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஓசூரில் ரூபாய் 20 கோடி செலவில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படுகிறது.
தமிழக அரசு தேசிய விருது பெறுவது எவ்வளவு பெரிய பெருமை; எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் அது பிடிக்கவில்லை. தமிழக அரசுக்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும் என கொச்சைப்படுத்தினார் ஸ்டாலின். நமக்கு நாளை எதிர்காலம் உண்டா என பயந்து எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தந்தது திமுக அரசுதான்; ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
நெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். முதல்வர், அமைச்சர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் சொல்லி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் எவ்வளவு அவதூறு செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அதிமுக அரசு அனுமதி தராது. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும். டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயரத்தைப் புரிந்துக்கொண்டு இதை அறிவிக்கிறேன். விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் நடவடிக்கைக்கு சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்றப்படும்." இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.