அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் தமிழ்ச்செல்வன். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவரும் இவர், நில புரோக்கர்கள் மூலம், அதே ஊரைச் சேர்ந்த வீரமணி மற்றும் அவருடைய மனைவி சொர்ணலதா ஆகியோருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு கிரயம் பேசி முடிப்பதற்காக, ரூ.21000 முன்பணம் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு, கிரயப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துப் புதிய ஆவணங்களையும் தயார் செய்து, நில புரோக்கர்களுடன் வீரமணி தம்பதியர் வீட்டுக்குச் சென்று, பத்திரப் பதிவு செய்துகொள்கிறோம் என்று கூறியபோது, “நீங்க என்ன ஜாதி?” என்று தமிழ்ச்செல்வனைப் பார்த்துக் கேட்டுள்ளனர். தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று தமிழ்ச்செல்வன் சொன்னதும் “நாங்க உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த உங்களுக்கு இடத்தை விற்கமாட்டோம். வெளியே போ.” என்று வீரமணி தம்பதியர் விரட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் சென்ற தமிழ்ச்செல்வன், தன்னை ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக புகாரளிக்க, வீரமணி மற்றும் சொர்ணலதா மீது வழக்கு பதிவாகியுள்ளது.