Skip to main content

பருப்பு, பாமாயில் டெண்டரை எதிர்த்து வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Case against dal, palm oil tender High Court action order

 

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒரு லிட்டர் அளவிலான 6 கோடி பாக்கெட் பாமாயில் கொள்முதல் செய்வதற்காக கடந்த நவம்பர் 8 ஆம் தேதி மின்னணு டெண்டர் (E- Tender) கோரப்பட்டது. இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

 

அந்த மனுவில், “ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்ட விதிகளின்படி 2 கோடி ரூபாய் வரையிலான டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். 2 கோடி ரூபாய்க்கு மேலான டெண்டர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். ஆனால் 2 கோடி ரூபாய்க்கு மேலான பாமாயில் டெண்டர்களுக்கு நவம்பர் 28 ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விதிகளுக்கு எதிரானது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜரானார். அவர், “வரவுள்ள கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி குறுகிய கால டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கு டெண்டர் சட்ட விதிகள்  அனுமதி வழங்குகிறது” என தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அவசர தேவைக்காக குறுகிய கால டெண்டர் கோர டெண்டர் சட்ட விதிகளில் வழிவகைகள் உள்ளன. உயர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்றுத்தான் கோரப்பட்டுள்ளது.

 

Case against dal, palm oil tender High Court action order

 

எனவே பொதுவிநியோகத் திட்டத்தில் 6 கோடி பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்தனர். மேலும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்