Skip to main content

ஓட்டுநரின் சாமர்த்தியம்; தப்பிய பொறியாளர் குடும்பம்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Car fire accident in trichy highway

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கே.வி.ஆர். சுப்பிரமணியன் (43). பொறியாளரான இவர், பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தனது மகன் ஹரியை, பொள்ளாச்சியில் உள்ள பள்ளி மற்றும் விடுதியில் விட்டுச் செல்வதற்காக மனைவி, கீதா (39) மற்றும் மகனுடன் பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டார். காரை ஓட்டுநர் மணிகண்டன் ஒட்டியுள்ளார். நேற்று (புதன்கிழமை) மாலை திருச்சி வந்த நிலையில், கீதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி செல்லும் முடிவை கைவிட்டு மீண்டும் தஞ்சை திரும்பியுள்ளனர்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இரவு 7.30 மணியளவில் பாலத்தின்மீது கார் சென்று கொண்டிருந்தது. பொன்மலை ரயில்வே பாலம் பழுது காரணமாக, போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்போது திடீரென இவர்களது காரின் முன்பகுதியிலிருந்து கரும்புகை வந்துள்ளது. இதனையடுத்து சுதாரித்த ஓட்டுநர் உடனடியாக அனைவரையும் கீழே இறங்கச்சொல்லியுள்ளார். காரிலிருந்து அனைவரும் இறங்கிய சற்று நேரத்தில் காரின் முன்பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். என்றாலும் கார் முற்றிலும் சேதமானது. ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அனைவரும் காரிலிருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்