சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் ஹோட்டல் விடுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸ் அவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா, ஒரு எடை மிஷின், ரூ.6000 பணம், 4 செல்போன்களை பறிமுதல் செய்து, அங்கிருந்த மதுரவாயலை சேர்ந்த எழிலரசன், வளசரவாக்கத்தை சேர்ந்த பிரித்திவிராஜ் , மாம்பலத்தை சேர்ந்த ராகுல், பாண்டிச்சேரியைச் சேர்ந்த உபயதுல்லா, டேவிட் பிராங்கிளின், உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் வடபழனியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதாகவும், கஞ்சா பழக்கத்தின் மூலம் தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என தங்களை கஞ்சா விற்க தூண்டியதாகவும் மேலும் இதற்கு முன் கஞ்சா விற்றதில்லை, பணத்திற்காக ஆசைப்பட்டு முதன் முறையாக இது போல செய்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் விக்னேஷ் தங்களை போன் மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நபர் கஞ்சா பொட்டலத்தை கொடுப்பார் அதை பத்திரமான ஓர் இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். பிறகு மீண்டும் நான் போன் செய்து சொல்லும் நபரிடம் இதை ஒப்படைக்க வேண்டும் என கூறி உள்ளார் . இதனால் கஞ்சாவை வீட்டிற்கு எடுத்து சென்றால் மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய மாணவர்கள் தனியார் விடுதியில் அறை எடுத்து அதை பதுக்கி வைத்து சுழற்சி முறையில் கஞ்சாவை பாதுகாத்து வந்துள்ளனர் . இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் இவர்கள் பிடிபட்டது தெரியவந்தது.
மேலும் கல்லூரி மாணவர்கள் குறித்து அவர்கள் படிக்கும் கல்லூரியில் போலீசார் விசாரித்தபோது அனைவரும் நன்கு படிக்கும் மாணவர்கள் எனவும் அவர்கள் மேல் இதற்கு முன் எந்த வழக்குகளோ, புகாரோ இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். எனவே கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மூளைச்சலவை செய்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ய தூண்டிய விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா பழக்கத்தில் அடிமையான கல்லூரி மாணவர்களின் ஒருவரின் தந்தை காவல்துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.