தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,
தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை தடுக்கும் நோக்கிலேயே சில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் பிரச்சனைகளை எல்லாம் கையிலெடுக்காமல் ஆளுநர் விவகாரத்தை மட்டுமே திமுக கையில் எடுத்துள்ளது. தூத்துக்குடி சம்பவத்தை போல சென்னை சேலம் எட்டுவழி சாலைக்கு எதிராக மக்களை திசைதிருப்ப சில அரசியல் அமைப்புகள் முயற்சிசெய்து வருகின்றன.
எனது தகுதியை பற்றிய பேச அன்புமணிக்கு என்ன தகுதி இருக்கிறது. என் கட்சிக்கு தலைவராக இருக்கும் தகுதி இருப்பதால்தான் இந்த இடத்திலிருக்கிறேன். என் கட்சி என்னை நம்புகிறது.
ராமதாஸ் சொன்னார் என் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சட்டமன்றம்,பாராளுமன்றம்,அமைச்சர் பதவி என எதிலும் அங்கம் வகிக்கமாட்டோம் அப்படி நடந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னார் இப்போ என்ன செய்வது. அவர்களுடன் விவாதிக்க நான் தயார் வாருங்கள் விவாதம் வைத்துக்கொள்ளலாம் யார் உழைப்பாளி, நேர்மையானவர்கள், சுய திறமையினால் வளர்ந்தவர்கள் என விவாதிக்கலாம். அதை விடுத்து நீங்க எல்லாம் மாநில தலைவரை அய்யோ அய்யோ என விமர்சிப்பது எப்படிப்பட்ட வகையில் ஏற்றுக்கொள்ளப்படும். நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி என்ன தவறான கருத்தை முன்வைத்து விட்டேன்.
எல்லோரும்தான் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறோம். அதனால் என்னுடைய கருத்தை நான் முன் வைப்பேன் ஆனால் நேர்மையில்லாமல் விமர்சிக்கமாட்டேன். உங்களுடைய கருத்தை வலிமையாக சொல்லுங்கள் ஆனால் என் தகுதிமேல் விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில் மரங்கள் வெட்டுவதை பற்றியெல்லாம் அவர்கள் பேசலாமா? என கேள்விதான் கேட்டேன் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா இல்லை என்றால் மறுத்துவிட்டு போகவேண்டியதுதானே. தமிழகத்தில் நேர்மையான அரசியல் குறைந்துவருகிறது எனக்கூறினார்.