இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.
தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.
காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.