உழைப்பை சுரண்டிவிட்டு ஊதியம் கொடுக்காமல் தெருவில் அலைய விடுவது தான் இந்த ஆட்சியாளர்களுக்கு அழகாக தெரிகிறது போல... நாங்களும் மனிதர்கள் தானே எங்களை நம்பியும் குடும்பங்கள் இருக்கிறது என பரிதாபமாக பேசுகிறார்கள் பாரத் சஞ்சார் என்கிற தொலை தொடர்பு துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்.
நாட்டு மக்கள் நலனில் அக்கறை காட்டுகிறதோ இல்லையோ இந்தியாவிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதில் அதீத ஈடுபாடுடன் நடப்பதாக மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை செயலிழக்க வைத்து அதை தனியாருக்கு கொடுப்பதில் இப்போது முன்னனியில் இருப்பது பி.எஸ்.என்.எல். எனப்படும் தொலைத்தொடர்பு துறை தான். இந்தத் துறையில் பணி புரியும் எழுபது சதவீத ஊழியர்கள் கட்டாயமாக ஓய்வு பெற வைத்து விட்டது இந்த அரசு. மிஞ்சி இருப்பவர்களுக்கும் சம்பளம் கொடுக்காமல் தட்டிக்கழித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், இன்று (11.02.2020) ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அதன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஐயா மோடி சர்க்காரே... எங்களுக்கு சம்பளம் கொடுமையா... ரெண்டு மூணு மாசம் ஆச்சு... சம்பளம் போடுங்கய்யா... என பரிதாபமாக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொந்த நாட்டில் மக்கள் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களை சம்பளத்துக்காக பரிதவிக்க வைப்பதில் இந்த அரசுக்கு அப்படி என்ன அலாதி இன்பம் இருக்க முடியும்? என்று பேசியப்படியே சென்றனர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.