சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வரும் 29 ஆம் தேதி, இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெராசகபே காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இதனையொட்டி சனிக்கிழமை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இங்கிலாந்து நாட்டின் இந்தியத் தூதரக இணை ஆணையர் ஆலிவர் மற்றும் கிள்ளை பேரூராட்சியின் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், வனத்துறையினருடன் படகில் சென்று ஆய்வு செய்தனர்.
இதில் ஆய்வுக்கு வரும் அமைச்சர், பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் எந்த இடத்தில் ஆய்வு செய்ய உள்ளார். அந்த இடத்தின் தன்மை எப்படி உள்ளது என்பது குறித்து முன்பணியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பிச்சவாரம் சுற்றுலா மையம் அமைந்துள்ள பிச்சாவரம் வனக்காடுகளில் மாங்குரோவ் மரங்களை அதிகளவில் நட்டு மாங்குரோவ் காடுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுடன் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், வட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.