சிதம்பரம் அருகே கண்ணங்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசின் அறிவிப்புகள் மற்றும் தகவல்களை நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் கல்வி அறிவுடன் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளும் விதமாக கிளை நூலகம் அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சரியான பராமரிப்பு இல்லாததால் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் திருடு போய் உள்ளன. அதில் உள்ள பொருட்கள் சேதமடைந்து கட்டடம் சிதிலமடைந்துள்ளது. தற்போது கிளை நூலகம் குடிகாரர்களின் கூடாரமாக உள்ளது. இதனால் பகல், இரவு என எல்லா நேரங்களிலும் அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நூலகம் இல்லாமல் அரசு வேலை தேர்வுக்கு தயார் செய்து கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே கிளை நூலகத்தை நல்ல முறையில் பராமரித்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பொது அறிவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கண்ணங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணன் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள சிலர் கிளை நூலகம் நமக்கு அறிவை கொடுக்கக்கூடியது என்ற புரிதல் இல்லாமல் செயல்பட்டதால் இதுபோன்று உள்ளது. தற்போது கிளை நூலகத்தை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ. 3 லட்சத்தில் சரி செய்வதற்காக திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்தவுடன் கிளை நூலகம் சிறப்பாக செயல்படும்'' என்றார்.