கோப்புப்படம்
ஈரோடு வ .உ. சி பூங்கா பெரிய காய்கறி மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறி லோடுகளை ஏற்றி வருகின்றன. பின்னர் லோடுகளை இறக்கிவிட்டு வாகன ஓட்டுநர்கள் வ.உ.சி பூங்கா பின்புறம் ஏ.பி.பி சாலையோரம் வாகனங்களை நிறுத்தி தூங்குவது வழக்கம். அதைப்போல் நேற்று இரவு கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து ஒரு மினி சரக்கு வாகனம் தக்காளி லோடுகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு வ .உ.சி பூங்கா பெரிய மார்க்கெட்டிற்கு வந்தது.
மினி சரக்கு வாகனத்தை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (32) என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் அவர் தக்காளி லோடுகளை மார்க்கெட்டில் இறக்கிவிட்டு வ.உ.சி பூங்கா பின்புறம் ஏ.பி.பி சாலையோரம் தனது வாகனத்தை நிறுத்தி வாகனத்தின் முன் பகுதியில் தூங்கினார். இன்று காலை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் மனோஜை எழுப்பி 'உன் வாகனத்தின் பின் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக' கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மனோஜ் பின்னால் சென்று பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வ.உ.சி பூங்காவில் நடைபயிற்சி சென்றவர்கள், காய்கறி வாங்க சென்றவர்கள் அந்த மினி சரக்கு வாகனத்தின் அருகே குவியத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. கழுத்து அறுபட்ட நிலையில் இருப்பதால் அவரை மர்ம கும்ப கும்பல் கொலை செய்து வாகனத்தில் போட்டு சென்றதா? அல்லது அந்த நபர் தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் இன்று காலை வ.உ.சி பூங்கா பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.