Skip to main content

“100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் பாஜக அரசு... ” - துரை வைகோ

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

The BJP government is thinking of stopping the 100 day program Durai Vaiko

 

100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விளங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்தது. கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்தது. இந்த திட்டத்தின் மூலம், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற பெண்களே அதிக அளவில் பயனடைந்து வருகின்றார்கள் கொரோனா காலத்தில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் தலைகீழாக மாறியது. மூன்று வேளை உணவு என்பதே கேள்விக்குறி ஆனது. அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவையை இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாய் தான் பூர்த்தி செய்தது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை இந்தியாவின் முற்போக்கான திட்டம் என்று பாராட்டியதோடு, உலகம் முழுமைக்கும் இத்திட்டம் ஒரு சிறந்த பாடம் என நெகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார். மேலும், இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்படும் என அவர் தெரிவித்து இருந்தார். அப்படிப்பட்ட தலைசிறந்த இந்த திட்டத்தை முடக்கும் நோக்கத்தில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகின்றது. 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முடக்கப்பட்டு உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

 

நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்றால் 2.7 இலட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், மத்திய பாஜக அரசு தற்போது வெறும் 60,000 கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த ஆண்டு நிதியை விட 21 விழுக்காடு குறைவு. இத்திட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புற, பட்டியலின, பழங்குடியின பெண்கள் தான் அதிக அளவில் பதிவு செய்து உள்ளனர். மத்திய பாஜக அரசின் நிதி குறைப்பால் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிப்பதை நிறுத்தும் விதமாக செயல்படும் மத்திய பாஜக அரசு, நேரடியாக பலகோடி பட்டியலின மக்களின் வாழ்வை இதன்மூலம் சிதைக்கிறது. அழிக்கிறது.

 

The BJP government is thinking of stopping the 100 day program Durai Vaiko

 

மத்திய பாஜக அரசின் பல தவறான கொள்கைகளால் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி குறைப்பை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். இல்லாவிடில், ஏழை எளிய மக்களின் கோபத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன். நிதி குறைப்பு ஒருபக்கம் இருக்க, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என சமீபத்தில் பேசியிருக்கிறார். மத்திய பாஜக அரசு அவர்களின் கைப்பாவையாக உள்ள ஆளுநர்களின் மூலம் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்த நினைப்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என பேசியிருப்பதை மதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் நூறு நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு தன் முயற்சியை கைவிட வேண்டும். இத்திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.