வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்று வருவதால், திருச்சியில் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்கழி பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு சதுரகிரி செல்ல நான்கு நாட்கள் வழங்கப்பட்டிருந்த அனுமதியை தற்போது வனத்துறை ரத்து செய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலைக்கு செல்ல டிசம்பர் 27 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.