2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் வென்று தொடர்ந்து ஆறாவது முறையாக தி.மு.க. கோட்டையாக சக்கரபாணி அத்தொகுதியை தக்கவைத்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பதவியை பெற்றார் சக்கரபாணி. அதோடு மேற்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இவர், தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் இந்த ஒரு வருடத்திற்குள்ளேயே நூறு கோடி ரூபாய்க்கு மேல் திட்டப் பணிகளையும், தொகுதியில் கொண்டு வந்ததுடன் மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அந்தத் தொகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்களை வாழ வைக்கவும் வழிவகுத்து கொடுத்து இருக்கிறார். கடந்த 16ம் தேதி ஒட்டன்சத்திரத்தில் உள்ள கலைஞர் விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் தொகுதியில் உள்ள நகரம், ஒன்றிய பகுதிகளில் இருக்கக்கூடிய நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர் 160 பேருக்கு புதிய ஆட்டோக்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். அதோடு ஆட்டோவையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதுமட்டுமின்றி தானும் ஆட்டோவை ஓட்டினார். அதுபோல் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநர்களும் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக விழாவில் கலந்து கொண்டு புதிய ஆட்டோ சாவியை அமைச்சர் சக்கரபாணியிடம் வாங்கிச் சென்றதின் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பங்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.
இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “முதல்கட்டமாக இந்த புதிய ஆட்டோக்களை உங்களுக்கு வழங்கி இருக்கிறேன். அதை நல்லபடியாக பயன்படுத்தி உங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். பொதுமக்களின் நாடிதுடிப்பை அறிந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். நானும் ஆட்டோவில் பலமுறை போயிருக்கும்போது, அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை கேட்டிருக்கிறேன். தமிழகத்தில் தற்போது பொற்கால ஆட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அதுபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் இதன்மூலம் உங்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும். பொதுமக்களுக்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இதுசம்மந்தாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள ‘நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்’ சங்கத் தலைவர் செந்தில்குமார் உள்பட ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘பத்து வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள சத்யா நகருக்கு ஆட்டோவில் அண்ணன் சக்கரபாணி செல்லும்போது எங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டார். அதை மனதில் வைத்து தான் எங்களுடைய கனவை அமைச்சர் நினைவாக்கி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நகரில் உள்ள 12 ஆட்டோ ஸ்டாண்டுகளிலும், ஒன்றியத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் இருக்கக் கூடிய ஓட்டுநர்கள் யார்? யாருக்கு புது ஆட்டோ வேண்டுமோ அவர்களை மனு கொடுக்க சொல்லுங்க என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டிலும் குறைந்த பட்சம் பத்து பேர் வீதம் மனு கொடுத்ததின் மூலம் நகரம், ஒன்றியம் என 160 ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க மனு கொடுத்தனர்.
அவர்கள் எல்லோருக்குமே புதிய ஆட்டோக்களை அமைச்சர் வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த நன்றியை எங்கள் குடும்பங்கள் உயிருள்ள வரை மறக்க மாட்டோம். அந்த அளவுக்கு எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொடுத்து ஒரு ஆட்டோவிற்கு ஓனராகவும் ஆக்கி இருக்கிறார். இதற்கு முன்பெல்லாம் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் வாடகை ஆட்டோவை ஓட்டுவதின் மூலம் எல்லா செலவும் போக வீட்டிற்கு ரூ.200 கொண்டு போவதே அரிதாக இருந்தது. அதன்மூலம் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தான் சாப்பிட்டு வந்தோம். ஆனால் இப்ப சொந்தமாக புது ஆட்டோ ஓட்டுவதின் மூலம் பெட்ரோல், கேஸ் செலவு போக தினசரி 500 வரை வீட்டிற்கு கொண்டு போய் வருவதின் மூலம் மூன்று நேரமும் சாப்பிட்டு குடும்ப செலவும் பார்க்கும் அளவிற்கு ஆட்டோ ஓட்டுநர்களின் வீடுகளுக்கே அமைச்சர் விளக்கேற்றி கொடுத்திருக்கிறார். அதை காலத்திற்கும் மறக்காமல் நன்றியோடு இருப்போம். அதோடு மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தேவைப்பட்டால் புது ஆட்டோ வாங்கித் தரவும் அமைச்சர் தயாராக இருக்கிறார்” என்றும் கூறினார்கள்.